1,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
  • Format: ePub

பனி மெலிதாய் பெய்து கொண்டிருந்த அந்த ஆறரை மணி நேர அந்தி நேரத்தில் மலைச்சரிவில் வளைந்து வளைந்து போயிருந்த பாதையில் நிதானமாய் நடக்க ஆரம்பித்தான் பவித்ரன். மலைச்சரிவு முழுவதும் சதுர சதுரமான பாத்திகளில் பெயர் தெரியாத தோட்டப் பயிர்கள் ஆரோக்கியமாய் பயிராகியிருந்தது. அவன் பஸ்ஸிலிருந்து இறங்கிய அந்த நிமிஷத்தைவிட இந்த நிமிஷம் காற்றில் குளிர் ஏறியிருந்தது. மூக்கின் நுனியும் காதுகளின் நுனிகளும் ஐஸ்கட்டி மாதிரி குளிர்ந்து போயிருந்தது. பவித்ரன் நடந்தான். அந்த டீக்கடை ஆள் சொன்ன மாதிரி வழி பூராவும் இருட்டாயிருந்தது. சில இடங்களில் பனி அடர்த்தியாய் வழியில் உட்கார்ந்திருந்தது. சுத்தமாய் ஒரு கிலோமீட்டர் தூரம்…mehr

Produktbeschreibung
பனி மெலிதாய் பெய்து கொண்டிருந்த அந்த ஆறரை மணி நேர அந்தி நேரத்தில் மலைச்சரிவில் வளைந்து வளைந்து போயிருந்த பாதையில் நிதானமாய் நடக்க ஆரம்பித்தான் பவித்ரன்.
மலைச்சரிவு முழுவதும் சதுர சதுரமான பாத்திகளில் பெயர் தெரியாத தோட்டப் பயிர்கள் ஆரோக்கியமாய் பயிராகியிருந்தது. அவன் பஸ்ஸிலிருந்து இறங்கிய அந்த நிமிஷத்தைவிட இந்த நிமிஷம் காற்றில் குளிர் ஏறியிருந்தது. மூக்கின் நுனியும் காதுகளின் நுனிகளும் ஐஸ்கட்டி மாதிரி குளிர்ந்து போயிருந்தது.
பவித்ரன் நடந்தான். அந்த டீக்கடை ஆள் சொன்ன மாதிரி வழி பூராவும் இருட்டாயிருந்தது. சில இடங்களில் பனி அடர்த்தியாய் வழியில் உட்கார்ந்திருந்தது.
சுத்தமாய் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்த பிறகு - மரங்களுக்கு மத்தியில் - அந்த பழங்கால பங்களா தெரிந்தது. ஒரேயொரு ஜன்னல் மட்டும் வெளிச்சத்தில் தெரிய மற்ற ஜன்னல்கள் எல்லாம் இருட்டில் இருந்தன. பங்களாவுக்கு அரண் போட்ட மாதிரி முள்வேலி தெரிய அதைச் சுற்றிக் கொண்டு போனான்.
மரச்சட்டங்களால் ஆன கேட் வந்தது. கேட் ஓரமாய் வாட்ச்மேன் கூண்டு தெரிந்தது. அதில் யாரோ உட்கார்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
கேட்டுக்கு முன்பாக வந்து நின்றான் பவித்ரன். கேட்டின் மரச்சட்டத்தை ‘டொக்’ என்று கையால் தட்டினான்.
அந்த உருவம் அசையாமல் கூண்டுக்குள் உட்கார்ந்திருந்தது.
“அய்யா...” குரல் கொடுத்தான்.
“............”
“அய்யா...” பவித்ரன் கொடுத்த குரலுக்கு பதிலாய் புகை மட்டும் கூண்டுக்குள்ளிருந்து வந்தது. அவன் காம்பவுண்ட் கேட்டை பலமாய்த் தட்டி “அய்யா” என்று கத்தினான்கூண்டுக்குள்ளிருந்து எந்த அசைவும் இல்லை. புகை மட்டும் வெளியேறிக் கொண்டிருந்தது. ‘ஒருவேளை வாட்ச்மேனுக்கு காது செவிடோ...?’ பவித்ரன் பொறுமையில்லாமல் காம்பவுண்ட் கேட்டை எக்கிப் பார்த்தான். கேட்டின் உள் பக்கமாய் தாழ்ப்பாள் கழண்டிருக்கவே தள்ளினான். கேட் காதுக்குப் பிடிக்காத சத்தத்தோடு கிர்ர்ர் என்று உள்ளே போக, பவித்ரன் ப்ரீப்கேஸை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
கூண்டை நோக்கி மெதுவாய் நடந்தான். கூண்டை நெருங்க... நெருங்க... சுருட்டு வாசம் குப்பென்று அடித்தது. கூண்டை நெருங்கி உள்ளே எட்டிப் பார்த்தான். கூண்டுக்குள் யாரோ சாய்ந்து உட்கார்ந்திருந்தார்கள். இருட்டில் முகம் தெரிய மறுத்தது.
“அய்யா...”
பேச்சில்லை... மூச்சில்லை...
“அய்யா...” சொல்லிக் கொண்டே தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை உருவி எடுத்து தீக்குச்சியைப் பற்ற வைத்து ஒரு சின்ன நெருப்புப் பிழம்பை உண்டாக்கினான். அந்த வெளிச்சப் பிழம்பை கூண்டுக்குள் கொண்டு போய் அதன் இருட்டை விரட்டிப் பார்த்தான்.
இருதயம் ஒருமுறை உதறிக் கொண்டது. உள்ளே காக்கி உடை யூனிபார்மில் இருந்த அந்த வாட்ச்மேன் கிழவன் கூண்டுக்குள் சாய்ந்து கால்களை வெளியே நீட்டியிருந்தான். கண்கள் வெறித்துப் பார்க்க, கைகள் தொய்ந்து போயிருந்தன. வாயிலிருந்த சிகரெட் மட்டும் உயிரோடு கனன்று புகையை வளர்த்துக் கொண்டிருந்தது.
“அய்யா.”
அவரைத் தொட்டான் பவித்ரன்.
வாட்ச்மேன் கிழவன் ஒரு பக்கமாய் சாய, சுருட்டு கூண்டுக்கு வெளியே எகிறி விழுந்தது