"என் மழைக்காலம் நீயடி" எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் புதிய காதல் நாவல். இயல்பான மனதை அள்ளிக்கொள்ளும் நடையில் மழையில் நனையும் சுகமான அனுபவம் பெறப் படித்து மகிழுங்கள். நாவலிலிருந்து "எப்பவுமே பணம் சம்பாதிக்கறதே குறியா இருக்கக்கூடாது. இந்த சமுதாயத்துக்கு நம்மளால என்ன செய்யமுடியுமோ அதை செஞ்சுடணும். அதுல பலன் இருக்கு இல்ல. அது வேற. உன் வேலைய நீ செய். பலன் கொடுக்கிறது ஆண்டவன். அவனுக்குத் தெரியும். எப்ப என்ன குடுக்கணும்னு." *** "கடமையை செய்யும் போது எதையும் எதிர்பார்த்து செய்யாத. மத்தவங்க கூட கம்பேர் பண்ணாதே. அவங்க ஒண்ணுமே பண்ணல அவங்களுக்கு எல்லாமே கிடைக்குது நாம இவ்வளவு தூரம் கஷ்டப்படுறோம் நமக்கு ஒண்ணுமே கிடைக்க மாட்டேங்குது அப்படிங்கற நினைப்பே எப்பவுமே வெச்சுக்காத. அந்த நினைப்பு உன்னோட வேலையை கெடுத்துவிட்டுடும். நமக்கு கிடைக்க வேண்டியது நமக்கு கண்டிப்பா கிடைக்கும். அது நமக்கு வெளிப்படையாக தெரியலன்னாலும் கிடைக்காமப் போகாது." *** மழையை ரசித்த நான் என் எதிரில் யார் வருகிறார்கள் என்பதை பார்க்காமல் போய்விட அவள் என் மீது மோதிக்கொண்டு சுதாரித்தாள். "ஸாரி" என்றாள். அய்யோ என்று அரற்றியது என் இதயம். இப்படி ஒருத்தி இருக்க முடியுமா? யாரிவள்? நிறம் மணம் திடம் என்று சிறுவயதில் பார்த்த த்ரி ரோஸஸ் விளம்பரம் இவளுக்கு மிகச்சரியாய் பொருந்தும். வளைந்த புருவங்களில் வெட்டுப்பட்டு நின்றேன். அவள் விழிகள் என் மொழிகளைக் கைது செய்துவிட மழலைக் கன்னங்களில் மனம் பறிகொடுத்து நின்ற என்னைப் பார்த்து புன்னகைத்தாள். 'அவள் எழிலில் நான் வீழ்ந்து கிடப்பதை அவள் கண்டிருப்பாளோ?' "ஹலோ" அவள் குரல் என்னை அசைக்க புன்னகைத்தேன். "ஸாரி" என்றேன். "நீங்க?" என்றாள். "புது அப்பாயிண்ட்மெண்ட். ஹெச் ஆர் மேடத்தைப் பார்க்கணும். ஜாயினிங் ரிப்போர்ட் கொடுக்க." "உங்க பேர்?" "சிவா" "வாங்க" அழைத்துச் சென்றாள். ஹெச் ஆர் அறைக்குள் சென்றாள். நான் திகைப்பாய் பார்க்க புன்னகைத்தபடியே சொன்னாள் "ஐஸ்வர்யா. ஹெச் ஆர் மேனேஜர்" எனக்குள் மழையடிக்க ஆரம்பித்தது. *** நாராயணபுரா எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இரண்டாவது மாடியில் என் அறையில் இருந்து வெளியே பால்கனியில் நின்றால் சாரல் மழை மனதைக் குளிர்விக்கும். செல்லும் மக்களை வேடிக்கை பார்த்தபடி நின்றிருப்பேன். இங்கே பக்கத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் உள்ளது. சாம்பார் கொஞ்சம் இனிப்பாக இருக்கும். அது என்னவோ தெரியவில்லை பெங்களூரில் எங்கு சாப்பிட்டாலும் சாம்பார் இனிப்பாகத்தான் இருக்கிறது. மதுரையில் எல்லாமே காரசாரமாக சாப்பிட்டு விட்டு இங்கு சாப்பிடுவது வித்தியாசமாகத்தான் இருக்கிறது. நான் சாப்பாட்டை எப்பொழுதும் பழிப்பதில்லை. ஒரு சின்ன கேரளா மெஸ் கூட அருகில் இருக்கிறது. அங்கே சாப்பாடு மத்தி மீன் வறுவல் கிடைக்கும். என்னுடன் விபின் இருக்கிறான். அவன் கேரளாதான். மலையாளிகள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு மத்திமீன் சாப்பாட்டுடன் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. விபினும் நானும் அந்த மெஸ்க்கு ஒருமுறை சென்றிருந்தோம். சாப்பாடு நன்றாகத்தான் இருந்தது. தனியாக இருக்க போர் அடித்தால் விபின் அறைக்குச் சென்று விடுவேன். எப்பொழுதும் ஒரு புதிய இடத்திற்கு செல்லும் பொழுது அங்கே கிடைக்கும் நட்பு மிக முக்கியமாக தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடும். நானும் விபினும் கொஞ்ச காலத்திலேயே நெருங்கிவிட்டோம். இப்பொழுது மோகன்லால் படங்கள் எனக்கும் இஷ்டம்தான். விபினுக்கு விஜய் சேதுபதி ரொம்பவே பிடித்துவிட்டது.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.