எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் புதிய ஹாரர் நாவல் "ராசாத்தி". இது எழுத்தாளரின் நூறாவது நாவல். ராசாத்தியை ஜென்மங்களாய் துரத்தும் ஆவி. யார் அது? ஏன்? முந்தைய ஜென்மத்தில் நடந்தது என்ன? கொடூரமான ஆவிக்கு ராசாத்தி பலியாகிறாளா? காப்பாற்றப்படுகிறாளா? நாவல் ஆரம்பம் முதல் இறுதி வரை வேறு எங்கும் அசையவிடாது படிக்க வைக்கும். பயப்பட வைக்கும். பரவசப்படுத்தும். ராசாத்தி எழுத்தாளரின் நூறாவது நாவல் மட்டுமல்ல அவருக்கு மற்றொரு மைல் கல் என்று தாராளமாக சொல்லலாம். பயப்படத் தயாரா? நாவலிலிருந்து "நான் கொடுத்த பலியை ஏற்றுக்கொண்டாயா இல்லையா என் முன்னே வா. வந்து சொல். நீ சொன்னால் தான் நான் நம்புவேன்." அவன் ஆங்காரமாய் கத்த அப்பொழுதும் சிலை அவனை அமைதியாய் பார்த்தது. உச்சகட்ட கோபம் அடைந்து தன் உள்ளங்கையை கத்தியால் குத்திக் கொண்டான். அந்த ரத்தத்தை அன்னம்மாவின் சிலை மீது வைத்தான். "சொல். இன்னும் நான் என்ன செய்ய வேண்டும் சொல் உனக்காக எது வேண்டுமானாலும் செய்கிறேன்." திடீரென்று அவன் முன் அந்த உருவம் தோன்றியது. அதன் முகம் கோரமாக நாக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. அதைப் பார்த்தவன் மகிழ்ந்தான். "அன்னம்மா இப்பொழுதாவது சொல் என் பலியை ஏற்றுக் கொண்டாயா? இல்லையா?" "காளிங்கா உன் பலியை நான் ஏற்றுக்கொள்ளவில்லை." "அம்மா" "மீண்டும் மீண்டும் மிருகங்களை கொண்டுவந்து பலியிட்டால் என் கோபத்திற்கு நீ ஆளாக வேண்டியது வரும்." "அம்மா" "ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நான் சொன்ன திதியில் நான் சொன்ன நட்சத்திரத்தில் ஒரு வீட்டின் முதல் கன்னிப்பெண் எனக்கு பலியிட வேண்டும். அது மட்டுமே எனக்கு மகிழ்ச்சி. " "நிச்சயம் செய்கிறேன் அன்னம்மா. வருகிற பௌர்ணமியன்று உனக்கு பலியிடுவதற்கு ஒருத்தியைப் பார்த்து வைத்திருக்கிறேன்." "நீ யாரை சொல்கிறாய் என்பது எனக்குப் புரியும்." "அன்னம்மா" "சமீபத்தில் அங்கே என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா?" அந்த உருவம் கேட்க காளிங்கன் தெரியாது என்று தலையசைத்தான். "என் வேட்டைக்கு நான் காத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் இருவர் என்னைப் பார்த்து விட்டார்கள். அவர்களை விட்டுவிட்டால் அவர்கள் வேறு எங்காவது போய் என்னைப் பற்றி சொல்லி என் பலி உஷாராகிவிட்டால் நான் என்ன செய்வேன்?" "அன்னம்மா" "இருவரின் தலையையும் பற்றி தரையில் அடித்து கொலை செய்தேன். " அன்னம்மாள் அதை சொல்லும் பொழுது அவள் கண்கள் காளிங்கனை வெறித்தன. அவர்கள் இறந்ததை அன்னம்மாள் மனதிற்குள் உணர்ந்து மகிழ்ந்தது அவனுக்குத் தெரிந்தது. "காளிங்கா" "சொல் அன்னம்மா நான் என்ன செய்ய வேண்டும்?" "என் பலி தப்பிக்காது பார்த்துக்கொள்ள வேண்டும்." "அதில் சந்தேகமே வேண்டாம் வருகிற பௌர்ணமியன்று அவள் பலியிடப்படுவாள்." "முட்டாள்" அன்னம்மா அவனை கோபமாய் பார்த்தாள். "ஏன் அன்னம்மா?" "வருகிற பௌர்ணமி தினத்தில் ஏதாவது ஒரு கோவிலுக்கு அவள் சென்று பலியிடப்படும் நேரத்தில் கோவிலில் இருந்து விட்டால் அவள் தப்பித்து விடுவாள்." "புரிகிறது. அது நடக்காமல் கவனமாய் இருக்கிறேன்." "வேண்டாம்" "அன்னம்மா " "சொல்" "எனக்குப் புரியவில்லை." "அதற்கான ஏற்பாட்டை நான் செய்து விட்டேன்." "என்ன ஏற்பாடு?" "அவள் வீட்டை துஷ்ட ஆவி ஒன்று கண்காணிக்கிறது. அவளை எச்சரிக்க முயன்ற கோடாங்கியை அது கொன்றுவிட்டது." "அவளுக்கு சந்தேகம் வரவில்லையா?" "துஷ்ட ஆவி கோடாங்கியைக் கொன்றதைக் கண்ட ஆந்தை பயந்து அலறியிருக்கிறது. விவரமானவர்கள் என்றால் புரிந்திருப்பர். பாவம் அவளுக்கு நடந்தது என்னவென்று புரிவதற்கு ஒரு ஜென்மம் வேண்டும்." ***
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.