காலம் வேகமாக மாறிக்கொண்டே போகிறது. புதிய கதைகள், புதிய புதிய காவியங்கள், புதிய புதிய உண்மைகள், யுகத்துக்கு யுகம், தலைமுறைக்குத் தலைமுறை ஆண்டுக்கு ஆண்டு தோன்றிக் கொண்டே இருக்கின்றன. கதைகளும் அவை அமைக்கப்பட்ட காலச் சூழ்நிலையும், சம்பவங்களும் நாளடைவில் வலுக்குறைந்து நம்பிக்கைக்கு அளவுகோலான நிகழ்கால வரம்புக்கு நலிந்து போகலாம். கதையும் கற்பனையும்தான் இப்படி அழியும். அழிய முடியும். அழிக்க முடியும். ஆனால் சத்தியத்துக்கு என்றும் அழிவில்லை! தர்மத்துக்கு என்றும் அழிவில்லை! கதையும் கற்பனையும் சரீரத்தையும் பிரகிருதியையும் போல வெறும் உடல்தான். சத்தியமும் தர்மமும் ஆன்மாவையும், மூலப்பிரகிருதியையும் போல நித்தியமானவை. காலத்தை வென்று கொண்டே வாழக் கூடியவை. இதை மறுப்பவர் எவருமில்லை. எங்கும் இல்லை என்றும் இல்லை. மகாபாரதக் கதையைத் தமிழில் ஐந்து பெரும் கவிகள் பாடியுள்ளனர். சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக, தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்காக, அசுர சக்திகளோடு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் போராடும் ஐந்து சகோதரர்களை இந்த மகாகாவியத்தில் சந்திக்கிறோம். தமிழில் இந்தக் காவியத்தைப் பாடியவரும் ஐவர்; காவியத்துள் பாடப்பட்டவரும் ஐவர். எனவே, இரு வகையாலும் 'ஐவர் காவியம்' என்ற பெயருக்கு மிகமிக ஏற்றதாக விளங்குகிறது மகாபாரதம். நெருப்பைத் தொட்டவர்களுக்குத்தான் அது சுடுகிறது. நெருப்புக்குச் சுடுவதில்லை. தருமமும் இப்படி ஒரு நெருப்புத்தான். அறியாமையினாலோ, அல்லது அறிந்து கொண்டே செருக்கின் காரணமாகவோ, தருமத்தை அழிக்க எண்ணி மிதிக்கிறவர்கள் அந்தத் தருமத்தாலேயே சுடப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். தண்ணீரில் உப்பு விழுந்தால் தண்ணீரா கரைகிறது? உப்புத்தானே சுரைகிறது.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.