"அருந்ததி ராயின் நாவல் அவரது சொந்த வாழ்க்கையின் சாயலைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அய்மனம் என்ற கேரள கிராமம்தான் அவருடைய சொந்த ஊர். நாவலின் கதை நடப்பதும் அய்மனத்தில்தான். இரட்டைக் குழந்தைகளான எஸ்தா என்ற எஸ்தப்பன், ராஹேல் இருவரும் ஒன்றாகப் பிறந்து பத்து வயதுவரை ஒன்றாக வளர்ந்து பெற்றோரின் மண விலக்குக் காரணமாகப் பிரிந்து விடுகிறார்கள். இருபத்தி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள். இந்த இடைவெளியில் நடக்கும் சம்பவங்கள்தாம் கதை. நாவலிலேயே குறிப்பிடப்படுவதுபோல மகத்தான கதைகள் என்பவை நீங்கள் கேட்ட, மீண்டும் கேட்க விழையும் கதைகளே. எந்த இடத்திலும் நீங்கள் உள்ளே நுழைந்து சௌகரியமாகப் பொருத்திக் கொள்ள இடமளிப்பவை. அவை உங்களை கிளர்ச்சியூட்டுவதாலும் தந்திரமான முடிவுகளாலும் ஏமாற்றுபவையல்ல. எதிர்பாராதவற்றால் உங்களை வியப்பில் ஆழ்த்துபவை அல்ல. அவை நீங்கள் வசிக்கும் வீட்டைப் போலப் பரிச்சயமானவை அல்லது உங்கள் காதலரின் வாசனையைப்போல. அவை எவ்வாறு முடியுமென்று தெரிந்திருந்தாலும் தெரியாததைரப் போலக் கேட்க வைப்பவை. தெரிந்த ஒரு கதையைத்தான் அருந்ததி ராய் இந்த நாவலில் சொல்கிறார். அதை இதுவரை தெரியாத முறையில் சொல்கிறார் என்பதுதான் இந்த நாவலின் சிறப்பம்சம். ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்தியக் கதைகளில் மொழி நடையாலும் சொல்லும் முறையாலும் திருப்புமுனையாகச் சொல்லப்படும் நாவல் சின்ன விஷயங்களின் கடவுள். இது மகத்தான இலக்கியப் படைப்பல்ல. ஆனால் முக்கியமான படைப்பு. இந்த நாவலின் வருகைக்குப் பிறகே உலக இலக்கியத்தில் இந்தியப் படைப்புகளுக்கு இலக்கிய மதிப்பும் சந்தை மதிப்பும் உயர்ந்திருக்கிறது.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, D ausgeliefert werden.